இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்க, 498 ஓட்டங்களால் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
309 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களை இன்றைய ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.
காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 600 ஓட்டங்களைக் குவித்தது.
மூன்றாம் நாளான இன்று 05 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களுடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
54 ஓட்டங்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்த அஞ்சலோ மத்யூஸ் 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும், மத்யூஸூடன் களமிறங்கிய டில்ருவன் பெரேரா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 291 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
309 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா 56 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷிகர் தவானும், செட்டேஷ்வர் புஜாராவும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
எனினும், அபினவ் முகுந்த், அணித்தலைவர் விராட் கோஹ்லி ஜோடி மூன்றாம் விக்கெட்டுக்காக 133 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
அபினவ் முகுந்த் 81 ஓட்டங்களைப் பெற்றதுடன், அவரது ஆட்டமிழப்பானது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் தனுஷ்க குணதிலக்கவின் முதல் விக்கெட்டாகும்.
அணித்தலைவர் விராட் கோஹ்லி 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

