பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ள நிலையில், அதிரடிப் படையின் சிறப்புப் பிரிவினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து நேற்று யாழ் நோக்கிச் சென்ற அவர்கள், யாழின் பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அத்துடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21ஆம் திகதி வடமராட்சி கிழக்கில் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோர் கடலோரக் காவற்படையினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
மறுநாள் 22ஆம் திகதி நல்லூரில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது. அதில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்தார்.
கடந்த 26ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து தமிழ் பொலிஸ் அதிகாரி மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில், கொக்குவில் பகுதியில்வைத்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் இருவர் மீது நேற்றுமுன்தினம் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களான குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.டி.கே.தர்மிக்க ரத்நாயக்கா (வயது 34) மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த ஏ.கே.சுரேந்திரன் (வயது 26) ஆகிய இருவர் மீதும் பட்டப்பகலில் இனந்தெரியாத இளைஞர்கள் குழுவினரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தத் தொடர் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, வாள்வெட்டுக் குழுக்களை கைது செய்வதற்காக அதிரடிப் படையின் அதி சிறப்பு படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

