இந்த நாட்டில் அகிம்சை போராட்டம் தேவையற்றது. அது புதைக்கப்பட வேண்டும் என்றபோது தான் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி போன்றவர்கள் ஆயுதம் மூலமே இவற்றினை வெல்லமுடியும் என நினைத்த காரணத்தினால் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று இந்த ஆயுதப்போராட்டத்தினை பலர் கொச்சைப்படுத்துகின்றனர். இந்த ஆயுதப்போராட்டம் மூலமே இலங்கையில் உள்ள இனப்பிரச்சினையை சர்வதேசத்திற்கு தெளிவாக எடுத்துக்காட்டியதாகும்.
கிழக்கு மாகாண இளைஞர்களின் வீரம் என்பது ஆயுதப்போராட்டத்தில் மறக்க முடியாத இடத்தினைக் கொண்டுள்ளது.
அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டதும் இந்த மட்டக்களப்பு மாநகரம் ஆகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லாவற்றையும் அடமானம் வைத்து விட்டதாக சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்த நாட்டில் இருந்த மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை இல்லாமல் செய்வதற்கு சர்வதேசமும் தமிழ் மக்களும் முக்கிய காரணமாக அமைந்தன.
சிறுபான்மை மக்களினால் எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியாது என கருதிய தென்னிலங்கைக்கு ஜனாதிபதி தேர்தல் மூலம் மாற்றத்தினை ஏற்படுத்திக்காட்டியவர்கள் இந்த தமிழ் பேசும் மக்களாகும்.
இன்று வடகிழக்கு மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் நிறைவேற்று அதிகார முறைமை இல்லாமல் செய்யப்படும். எனவே இவற்றுக்கு ஆதரவு வழங்குங்கள் என்று சர்வதேசம் கேட்கின்றது.
நாங்கள் துரிதமாக அனைத்தையும் தட்டிக்கழித்து இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பத்தினை வழங்கக்கூடாது என்பதற்காகவே இன்று சில விட்டுக்கொடுப்புகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்கின்றது.
இணைந்த வடகிழக்கில் சமஸ்டி முறையிலான தீர்வினை இந்த அரசாங்கம் தர மறுக்குமானால் நாங்கள் பிரிந்துவாழும் சந்தர்ப்பத்தினை தரவேண்டும் என சர்வதேசத்திடம் கேட்கும் நிலையேற்படும்.
வடகிழக்கில் எமது இளைஞர்கள் இரத்தத்தினை சிந்தினார்கள். இணைந்த வடகிழக்கினை பிரிப்பதற்கு யாராலும் முடியாது.
வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும். சமஸ்டிமுறையிலான தீர்வு கிடைக்க வேண்டும். இதுதான் எங்களது கொள்கையாகும்.

